ஆஷஸ் டெஸ்ட்; பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம்...இங்கிலாந்து 592 ரன்கள் குவிப்பு...!


ஆஷஸ் டெஸ்ட்; பேர்ஸ்டோ அதிரடி ஆட்டம்...இங்கிலாந்து 592 ரன்கள் குவிப்பு...!
x

Image Courtesy: AFP

இங்கிலாந்து தரப்பில் க்ராவ்லி 189 ரன், பேர்ஸ்டோ 99 ரன் (நாட் அவுட்) எடுத்தனர்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டுவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் 36 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சை பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் தொடங்கினர். டக்கெட் (1 ரன்) ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார். அடுத்து கிராவ்லியுடன், மொயீன் அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

மொயீன் அலி தனது பங்குக்கு 54 ரன்கள் எடுத்தார். அடுத்து ஜோ ரூட் வந்தார். மறுமுனையில் அதிரடி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய ஜாக் கிராவ்லி, ஆஸ்திரேலியாவின் ஷாட்பிட்ச் வியூகத்தை தகர்த்து ரன்களாக மாற்றினார். ஜோ ரூட்டும் அடித்து நொறுக்கவே ஸ்கோர் எகிறியது. கிராவ்லி 93 பந்துகளில் தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார்.

ஸ்கோர் 336-ஐ எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. கிராவ்லி 189 ரன்களில் (182 பந்து, 21 பவுண்டரி, 3 சிக்சர்) கேமரூன் கிரீன் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜோ ரூட் 84 ரன்களில் (95 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 72 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 384 ரன்கள் குவித்திருந்தது.

இதையடுத்து 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 61 ரன், பென் ஸ்டோக்ஸ் 51 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தார். மறுமுனையில் கிறிஸ் வோக்ஸ் 0 ரன், மார்க் வுட் 6 ரன், ஸ்டூவர்ட் பிராட் 7 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 107.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 592 ரன்கள் எடுத்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட், ஸ்டார்க், க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை ஆட உள்ளது.


Next Story