ஆஷஸ் டெஸ்ட்; மொயீன் அலிக்கு அபராதம் விதித்த ஐசிசி...காரணம் என்ன...?


ஆஷஸ் டெஸ்ட்; மொயீன் அலிக்கு அபராதம் விதித்த ஐசிசி...காரணம் என்ன...?
x

2023 ஆஷஸ் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஆஷஸ் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்காம் நகரில் துவங்கி நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளேர் செய்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 9, மார்னஸ் லபுஸ்ஷேன் 0, ஸ்டீவ் ஸ்மித் 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா நங்கூரமாக நின்று சதமடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38, அலெக்ஸ் கேரி 66 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்தனர். உஸ்மான் கவாஜா 141 ரன்னுக்கு அவுட் ஆனார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி நேர்மைக்கு புறம்பாக நடந்து கொள்ளும் விதிமுறையை மீறியதாக அறிவித்துள்ள ஐசிசி அவருக்கு ஒரு கருப்பு புள்ளி தண்டனையாக கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அதாவது இப்போட்டியின் 2வது நாளில் 89வது ஓவரின் போது தன்னுடைய கைகள் ஈரமாவதை தடுத்து உலர்ந்த வகையில் வைத்திருக்கும் மருந்து போன்ற பொருளை மொயின் அலி பவுண்டரி எல்லையில் நின்று பீல்டிங் செய்யும் போது தடவிக் கொண்டார்.

அதை பார்த்த நடுவர் ஆண்டி பைக்ராப்ட் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்ட ஐசிசி இந்த போட்டியில் மொயின் அலிக்கு 25% சம்பளம் அபராதம் மற்றும் ஒரு கருப்பு புள்ளி தண்டனையாக விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதாவது 2.20 விதிமுறைப்படி போட்டியில் விளையாடும் வீரர்கள் நடுவரிடம் கேட்காமல் தங்களுடைய சொந்த நலனுக்காக தன்னிச்சையாக நடந்து கொள்வது குற்றமாகும். அதை செய்த காரணத்தால் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. அதே சமயம் அந்த மருந்தை தன்னுடைய கைகளில் மட்டுமே பயன்படுத்தினாரே தவிர பந்துகளில் பயன்படுத்தவில்லை.

அதன் காரணமாக 41.3 விதிமுறையை மீறாமல் பந்தை சேதப்படுத்தாத காரணத்தால் மேற்கொண்டு மொயின் அலியிடம் எவ்விதமான விசாரணை நடத்தப்படாது என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது இந்த போட்டியில் மொயின் அலி கைகளை உலர்வாக வைத்துக் கொள்வதற்காக மருந்தை தடவிக் கொண்டது சரி தான் என்றாலும் அதை நடுவரிடம் கேட்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதால் இந்த தண்டனையை அறிவித்துள்ள ஐசிசி கண்டிப்புடன் செயல்பட்டுள்ளது.

அதே சமயம் அந்த மருந்தை பந்தை சேதப்படுத்தும் நோக்கத்தில் அதன் மீது பயன்படுத்தாத காரணத்தால் மொய்ன் அலி மேற்கொண்டு சந்திக்க வேண்டிய விசாரணைகளில் இருந்து தப்பியுள்ளார்.


Next Story