ஆசிய கோப்பை: பாபர் அசாம் , இப்திகார் அகமது அதிரடி சதம்..! பாகிஸ்தான் 342 ரன்கள் குவிப்பு
நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 342 ரன்கள் குவித்துள்ளது.
கராச்சி,
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பகார் ஜமான், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.தொடக்கத்தில் பகார் ஜமான் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இமாம்-உல்-ஹக் 4 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார் .
பின்னர் கேப்டன் பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் இணைந்து சிறப்பாக ஆடினர். பொறுப்புடன் விளையாடி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். பாபர் அசாம் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார் .
அணியின் ஸ்கோர் 111 ரன்னாக இருந்த போது முகமது ரிஸ்வான் 44 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் பாபர் அசாமுடன் , இப்திகார் அகமது இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.இப்திகார் அகமது 43 பந்துகளில் அரைசதம் அடித்தார்.தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 109 பந்துகளில் சதம் அடித்தார்.
இதன் பின்னர் பாபர் அசாம் ,இப்திகார் அகமது இருவரும் இணைந்து பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டனர். குறிப்பாக இப்திகார் அகமது 67 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இதனால் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது.இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 342ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பாபர் அசாம் 151ரன்கள் (14 பவுண்டரி , 4 சிக்சர்), இப்திகார் அகமது 109ரன்கள்(11 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தனர்.
நேபாளம் சார்பில் சொம்பல் காமி 2 விக்கெட் , கரண் கேசி, சந்தீப் லாமிச்சானே தலா 1விக்கெட் வீழ்த்தினர்.