ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நேபாளம்


ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நேபாளம்
x

image courtesy: BCCI twitter

தினத்தந்தி 4 Sept 2023 8:07 PM IST (Updated: 4 Sept 2023 10:09 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நேபாளம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.

பல்லகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் இருவரும் முறையே 38 மற்றும் 58 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய பீம் ஷர்கி 7 ரன்கள், ரோகித் பவுடல் 5 ரன்கள், குஷால் மல்லா 2 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அடுத்து வந்த குல்ஷன் ஜா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நேபாளம் 37.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

தொடர்ந்து திபேந்திர சிங் 29 ரன்களிலும் சோம்பால் கமி 48 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இந்த நிலையில் 48.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணி சார்பில் ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

1 More update

Next Story