ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்


ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 16 Jan 2024 8:00 PM GMT (Updated: 16 Jan 2024 8:01 PM GMT)

1997-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்டு,

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக (3-0) வென்ற கையோடு இந்த போட்டியில் ஆடுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடத்தில் ஸ்டீவன் சுமித் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4-வது வரிசையில் ஆடிய அவர் தொடக்க வரிசையில் எப்படி ஜொலிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் கவின் ஹோட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷமார் ஜோசப் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் காண்கின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனுபவம் இல்லாத வீரர்களை உள்ளடக்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான். இவ்விரு அணிகளும் இதுவரை டெஸ்ட் போட்டியில் 118 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 60-ல் ஆஸ்திரேலியாவும், 32-ல் வெஸ்ட்இண்டீசும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 25 ஆட்டங்கள் டிரா ஆனது. 1997-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் அணி டெஸ்டில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story