ஆஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - யுவராஜ் சிங் எச்சரிக்கை


ஆஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - யுவராஜ் சிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Nov 2023 11:14 PM GMT (Updated: 18 Nov 2023 11:24 PM GMT)

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோத உள்ளன.

அகமதாபாத்,

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோத உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

உலகக்கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ள இந்தியாவுக்கு யுவராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ' உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்கும்போது அவர்கள் மோசமாக விளையாடவில்லை. இந்திய வீரர்கள் செய்யும் தவறுகளால் மட்டுமே அவர்கள் இந்த உலகக்கோப்பை இழக்க நேரிடும். இந்திய வீரர்கள் தற்போது மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர் என்று நான் நினைக்கிறேன். 2003ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இறுதிப்போட்டியில் நாம் சிறப்பாக ஆடினாலும் ஆஸ்திரேலியா நம்மை ஆதிக்கம் செய்தது.

இம்முறை உலகக்கோப்பை தொடரில் நாம் ஆதிக்கம் செலுத்துகிறோம். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அதன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் இந்தியாவை ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியாது. ஆனால், ஆஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஆட்டத்தின் அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என ஆஸ்திரேலியாவுக்கு தெரியும். உலகக்கோப்பையை பல முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், அணியின் முக்கிய பேட்ஸ்மென்கள் அவுட் ஆனபோதும் பேட் கம்மின்ஸ் மற்றும் மிச்சேல் ஸ்டார்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெரிய ஆட்டங்களில் வெற்றிபெறும் குணாதிசயம் கொண்டுள்ளதால் ஆஸ்திரேலியா பெரிய ஆட்டங்களில் வெற்றிபெறுகிறது' என்றார்


Next Story