ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட்: 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
செஞ்சூரியன்,
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் சரிவில் இருந்து எழுச்சி பெற்ற தென்ஆப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா மார்க்ரமின் சதம் மற்றும் குயின்டான் டி காக், கேப்டன் தெம்பா பவுமா ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 338 ரன்கள் குவித்ததுடன், ஆஸ்திரேலியாவை 34.3 ஓவர்களில் 227 ரன்னில் மடக்கியது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. தங்களது எழுச்சியை தொடர்ந்து தொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்க அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சந்தித்த தடுமாற்றத்தை சரிசெய்து தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி வரிந்து கட்டும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.