ஒரு பந்தில் 7 ரன்கள் அடித்து அரைசதம் கடந்த ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா..!
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் வரும் 14-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடுகிறது.
இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் ஆஸ்திரேலிய வீரர் ரென்ஷா ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார்.
இந்த சம்பவம் 78-வது ஓவரில் அரங்கேறியது. இந்த ஓவரை அப்ரார் அகமது வீசினார். ரென்ஷா 47 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இந்த ஓவரின் 4-வது பந்தை ரென்ஷா அடித்தார். இதனை பவுண்டரி செல்லவிடாமல் தடுத்த ஷான் மசூத் பந்து வீச்சாளர் பக்கம் வீசினார். அதனை பிடித்த பாபர் அசாம் கீப்பர் பக்கம் வீசினார். அதனை விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது பிடிக்காத நிலையில் பந்து பவுண்டரி சென்றது.
3 ரன்கள் ஓடி எடுத்த நிலையில் பவுண்டரியையும் சேர்த்து மொத்தம் அந்த பந்தில் 7 ரன்கள் வந்தன. அதன் மூலம் ரென்ஷா அரைசதம் கடந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.