டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பாபர் அசாம்- ரிஸ்வான் ஜோடி புதிய சாதனை


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பாபர் அசாம்- ரிஸ்வான் ஜோடி புதிய சாதனை
x

Image Courtesy: Twitter TheRealPCB

தினத்தந்தி 9 Nov 2022 5:14 PM GMT (Updated: 9 Nov 2022 5:18 PM GMT)

அசாம்- ரிஸ்வான் ஜோடி அதிரடியால் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

சிட்னி,

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேரில் மிட்செலின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் அதிரடியால் 19.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் பாபர் அசாம் 53 ரன்களும் (42 பந்துகள்), முகமது ரிஸ்வான் 57 ரன்களும் (43 பந்துகள்) எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தனர்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று முறை 100+ ரன்கள் பாட்னர்ஷிப்பை (எந்த ஒரு விக்கெட்டுக்கும்) கடந்த முதல் ஜோடி என்ற சாதனையை பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் படைத்துள்ளனர். இதற்கு முன் இந்த ஜோடி கடந்த 2021 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராகவும் (152 ரன்கள் பாட்னர்ஷிப்) நமீபியாவுக்கு எதிராகவும் (113 ரன்கள் பாட்னர்ஷிப்) 100+ ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்து இருந்தனர்.

இந்த உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுகளில் ரன்கள் குவிக்க திணறி வந்த அசாம்- ரிஸ்வான் ஜோடி இறுதி போட்டிக்கு முன்பாக பார்முக்கு திரும்பி இருப்பது பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.


Next Story