உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் அறிவிப்பு..!!
வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 30-ம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் வங்காளதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது. அதன்படி வங்காளதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷகிப் ஏற்கெனவே வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உள்ளார். அவர் இறுதியாக 2017-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.
இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் கூறுகையில்,'வரவிருக்கும் பெரிய தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். மிகவும் சிக்கலான நேரத்தில் அணிக்கு ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமித்துள்ளோம். உலகக்கோப்பைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஷகிப்பை தவிர வேறு சிறந்த கேப்டனையும் தேர்வு செய்ய இயலாது. உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியை நாளை அறிவிக்க உள்ளோம்' என கூறினார்.
இதன் மூலம் ஷகிப் வங்காளதேசத்தின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாகி உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஷகிப் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் வங்காளதேச அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.