பந்துவீச்சில் மிரட்டிய சென்னை...டெல்லியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...!


பந்துவீச்சில் மிரட்டிய சென்னை...டெல்லியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...!
x

Image Courtesy: @IPL 

தினத்தந்தி 20 May 2023 1:46 PM GMT (Updated: 20 May 2023 2:48 PM GMT)

ஐபிஎல் தொடரில் இதுவரை குஜராத், சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

டெல்லி,

16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.

இந்நிலையில், இன்று 2 முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மாலை டெல்லியில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு எந்த ஒரு சிக்கலுமின்றி முன்னேறலாம் என்ற நிலையில் சென்னை அணி ஆடி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கெய்ஜ்வாட் மற்றும் கான்வே டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியில் மிரட்டிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி அணியினர் நின்றனர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 50 பந்தில் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். மறுபுறம் டெவான் கான்வே அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஷிவம் துபேவும் சிக்சர் மழை பொழிந்தார். அவர் 9 பந்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து தோனி களம் இறங்கினார். அதிரடியாக ஆடிய கான்வேவும் 87 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 5 ரன், பிலிப் சால்ட் 3 ரன், ரீலி ரோசவ் 0 ரன், யஷ் துல் 13 ரன், அக்சர் படேல் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த வார்னர் 86 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 2வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.


Next Story