இந்தியாவை எதிரிநாடு என்று கூறியதால் சர்ச்சை: எதிர்ப்புக்கு பணிந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்


இந்தியாவை எதிரிநாடு என்று கூறியதால் சர்ச்சை: எதிர்ப்புக்கு பணிந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்
x

image screengrab from video tweeted by @AskAnshul

தினத்தந்தி 30 Sept 2023 3:17 AM IST (Updated: 30 Sept 2023 6:35 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், இந்தியாவை எதிரிதேசம் என்று உச்சரித்தது சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையானது.

ஐதராபாத்,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 7 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் அணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் ரசிகர்கள் வரிசையாக நின்று உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் அளித்த ஒரு பேட்டியில், 'புதிய மத்திய ஒப்பந்தப்படி பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. இது உலகக் கோப்பை போட்டிக்காக எதிரிநாடுக்கு செல்லும் அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார். அவர் இந்தியாவை எதிரிதேசம் என்று உச்சரித்தது சமூகவலைதளத்தில் வைரலாகி சர்ச்சையானது. பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜகா அஷ்ரப் நேற்று தனது, நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 'இந்தியாவில் பாகிஸ்தான் அணியினருக்கு அளிக்கப்பட்ட அற்புதமான வரவேற்பு இரு நாட்டு ரசிகர்களும் இவ்விரு நாட்டு வீரர்களை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இத்தகைய சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்த இந்தியாவுக்கு வாழ்த்துகள். இந்தியா- பாகிஸ்தான் அணியினர் கிரிக்கெட் களத்தில் எதிர்கொள்ளும் போதெல்லாம் பாரம்பரிய போட்டியாளராக தங்களை வெளிப்படுத்துவார்களே தவிர, எதிரிகளாக அல்ல. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இதே போன்று வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் இருந்து சிறந்த கிரிக்கெட்டை பார்க்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story