கான்வே சதம்...சீட்டு கட்டு போல் சரிந்த நியூசிலாந்து விக்கெட்டுகள் - பாகிஸ்தான் வெற்றி பெற 262 ரன் இலக்கு...!
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்று வருகிறது.
கராச்சி,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது. அடுத்ததாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலென், டெவான் கான்வே ஆகியோர் களம் இரங்கினர். இதில் பின் ஆலென் 1 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் புகுந்தார்.
இந்த இணை அருமையாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே சதமும், வில்லியம்சன் அரைசதமும் அடித்து அசத்தினர். இதில் கான்வே 101 ரன்னும், வில்லியம்சன் 85 ரன்னும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் இறங்கிய மிட்செல் 5 ரன்னிலும், டாம் லதாம் 2 ரன்னிலும், கிலென் பிலிப்ஸ் 3 ரன்னிலும், பிரேஸ்வெல் 8 ரன்னிலும், ஷோதி 7 ரன்னிலும், சவுதி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ஒரு கட்டத்தில் 183 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 261 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே 101 ரன்னும், வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், ஹாரிஸ் ராப், உசாமா மிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து பாகிஸ்தான் அணி 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது.