நான் விரைவாக குணமடைந்து விளையாடியதற்கான பாராட்டுகள் அவரையே சேரும் - குல்தீப் யாதவ்


நான் விரைவாக குணமடைந்து விளையாடியதற்கான பாராட்டுகள் அவரையே சேரும் - குல்தீப் யாதவ்
x

image courtesy: IPL

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி 18.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜேக் பிரேசர் அரை சதம் அடித்தார். டெல்லியின் இந்த வெற்றிக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த சில போட்டிகளில் காயத்தால் விளையாடாத அவர் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றது பற்றி பேசியது பின்வருமாறு:-

"பிட்டாக இல்லாதது மிகவும் கடினமாக இருந்தது. முதல் போட்டியிலேயே காயமடைந்த எனக்கு அதற்கடுத்த போட்டிகளில் மிடில் ஓவர்களில் டெல்லி தடுமாறியதை பார்க்க கடினமாக இருந்தது. இருப்பினும் நான் விரைவாக குணமடைந்து விளையாடியதற்கான பாராட்டுகள் உடற்பயிற்சியாளர் பட்ரிக் பர்கர்ட்டுக்கு செல்ல வேண்டும். நான் எடுத்த 3 விக்கெட்டுகளும் முக்கியமானது. அதை மிடில் ஓவர்களில் எடுத்ததால் ரன் ரேட் கட்டுக்குள் வந்தது.

பூரானுக்கு எதிராக நான் அதிகம் விளையாடியுள்ளேன். எனவே அவருக்கு எதிரான என்னுடைய திட்டம் சரியாக இருந்தது. எனது திட்டங்களில் நான் தெளிவாக இருக்கிறேன். ஒரு ஸ்பின்னராக எனக்கு லென்த் முக்கியம். என்னுடைய திறமையில் தெளிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். டிஆர்எஸ் எடுக்கும் போது 50 - 50 என்று உணர்ந்தால் அதை எடுக்க வற்புறுத்துவேன். 60 - 40 என்ற சூழ்நிலையில் ரிஷப் பண்ட் பேச்சை கேட்பேன். பவுலராக நீங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டிஆர்எஸ் எடுக்க விரும்புவீர்கள்" என்று கூறினார்.


Next Story