இங்கிலாந்து வெற்றி: 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்..!


இங்கிலாந்து வெற்றி: 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்..!
x

Image Courtacy: EnglandCricketTwitter

தினத்தந்தி 31 July 2023 5:40 PM GMT (Updated: 31 July 2023 7:03 PM GMT)

ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

லண்டன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 283 ரன்களும், ஆஸ்திரேலியா 295 ரன்களும் எடுத்தன.

12 ரன் பின்தங்கிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் அதிரடியாக மட்டைைய சுழற்றி 395 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவுக்கு 384 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் (58 ரன்), உஸ்மான் கவாஜா (69 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு, இங்கிலாந்து பவுலர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். முந்தைய நாள் கடைசி கட்டத்தில் பந்தின் தன்மை மாறி விட்டதாக வேறு பந்து வழங்கப்பட்டது. அந்த புதிய பந்து இங்கிலாந்து பவுலர்களுக்கு நன்றாக கைகொடுத்தது.

வார்னர் (60 ரன்), கவாஜா (72 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காலி செய்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்சேன் (13 ரன்) நிலைக்கவில்லை. 4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் சுமித்தும், டிராவிஸ் ஹெட்டும் இணைந்து சரிவில் இருந்து மீட்டு கொஞ்சம் நம்பிக்கையை கொண்டு வந்தனர். சுமித் 39 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை 'லெக் கல்லி'யில் நின்ற பென் ஸ்டோக்ஸ் பிடித்து பந்தை மேல்வாக்கில் தூக்கி போட முயன்ற போது அது நழுவி கீழே விழுந்ததால் அவுட் மறுக்கப்பட்டது.

மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா வலுவான நிலையில் தென்பட்டது. அதன் பிறகு மழையால் ஆட்டம் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்து வெற்றி

மழை நின்று மீண்டும் போட்டி தொடங்கிய போது இங்கிலாந்தின் கை ஓங்கியது. அணியின் ஸ்கோர் 264-ஐ எட்டிய போது டிராவிஸ் ஹெட் 43 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 54 ரன்னிலும் (94 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள். மிட்செல் மார்ஷ் (6 ரன்), மிட்செல் ஸ்டார்க் (0), கேப்டன் கம்மின்ஸ் (9 ரன்), டாட் மர்பி (18 ரன்), அலெக்ஸ் கேரி (28 ரன்) சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டனர்.

முடிவில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 94.4 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை சுவைத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் சமனில் முடித்தது. அத்துடன் 2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சிறப்பையும் தக்க வைத்துக் கொண்டது. முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. என்றாலும் முந்தைய ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருப்பதால் கோப்பை அந்த அணி வசமே இருக்கும்.



வெற்றியுடன் விடைபெற்றார் பிராட்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கடைசி இரு விக்கெட்டுகளை சாய்த்து அணிக்கு வெற்றி தேடித்தந்ததுடன், ரசிகர்களின் பாராட்டுகளையும் அள்ளினார். இத்துடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். 37 வயதான ஸ்டூவர்ட் பிராட் 167 டெஸ்டில் விளையாடி 604 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சதமில்லாத டெஸ்டில் அதிக ரன் குவிப்பு

இந்த டெஸ்டில் எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை. இரு அணியின் இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 1,317 ரன்கள் குவிக்கப்பட்டது. டெஸ்ட் ஒன்றில் சதம் இன்றி சேர்க்கப்பட்ட அதிக ரன்கள் இது தான். இதற்கு முன்பு 1928-ம் ஆண்டு டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து இடையிலான டெஸ்டில் இந்த வகையில் 1,272 ரன்கள் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.


Next Story