உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து பலப்பரீட்சை
10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆமதாபாத்,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றது. இந்த நிலையில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்பு இந்தியாவில் 3 முறை உலகக் கோப்பை போட்டி நடந்தாலும் அவற்றை இந்தியா ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து தான் நடத்தியது. முதல் முறையாக இப்போது இந்தியா தனியாக இந்த போட்டியை நடத்துவது தனித்துவம் வாய்ந்ததாகும்.
நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக தகுதி பெறவில்லை.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் மோதும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை. பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.
தொடக்க ஆட்டத்தில்...
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முந்தைய உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இதே இங்கிலாந்திடம் மல்லுக்கட்டிய நியூசிலாந்து சூப்பர் ஓவர் முடிவிலும் சமனில் நீடித்ததால் அதிக பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு பழிதீர்க்க இது சரியான சந்தர்ப்பமாகும்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது முழங்காலில் காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. பயிற்சி ஆட்டத்தில் நன்றாக பேட்டிங் செய்தாலும் 100 சதவீத உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டாம் லாதம் அணியை வழிநடத்துகிறார். இதே போல் வலது கை விரல் எலும்பு முறிவுக்கு 2 வாரத்திற்கு முன்பு ஆபரேஷன் செய்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியும் குணமடையவில்லை. அதனால் அவரும் தொடக்க ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என்று டாம் லாதம் நேற்று தெரிவித்தார். வில்லியம்சனின் உடல்தகுதி ஒவ்வொரு நாளாக கண்காணிக்கப்படுகிறது. அவர் விரைவில் களம் திரும்புவார் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
லாதம் பேட்டி
மேலும் லாதம் கூறுகையில் 'இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியம். அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான எங்களது வீரர்களுக்கு இந்தியாவில் ஐ.பி.எல். உள்ளிட்ட நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பதால் அதை எங்களால் செய்ய முடியும். நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடும் நிபுணர்களின் கணிப்பை எல்லாம் நாங்கள் கண்டு கொள்வதில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே எங்களது முழு கவனமும் உள்ளது. நியூசிலாந்துக்கே உரிய பாணியில் விளையாட வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு, அற்புதமான ஒரு அணிக்கு எதிராக தொடக்க ஆட்டத்தில் விளையாட இருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இதில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளோம்' என்றார்.
அந்த அணியில் கான்வே, வில் யங், டேரில் மிட்செல் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், டிரென்ட் பவுல்ட், மேட் ஹென்றி, சான்ட்னெர், சோதி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பந்து வீச்சிலும் வலு சேர்க்கிறார்கள்.
ஸ்டோக்ஸ் சந்தேகம்
நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழையும் இங்கிலாந்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டியுள்ளது. கேப்டன் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், டேவிட் மலான், லிவிங்ஸ்டன் என்று இங்கிலாந்து அணியில் அதிரடி சூரர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்படுவதால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. அவர் இல்லாவிட்டால் ஹாரி புரூக்குக்கு இடம் கிடைக்கும். பந்து வீச்சில் மார்க்வுட், ரீஸ் டாப்லே, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் மிரட்டுகிறார்கள். அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றதால் இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும்.
இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில், 'பென் ஸ்டோக்ஸ் இடுப்பு பகுதியில் லேசான காயத்தால் அவதிப்படுகிறார். அதில் இருந்து மீள்வதற்கு அவர் பிசியோவுடன் இணைந்து பணியாற்றுகிறார். என்றாலும் போட்டியின் தொடக்கத்தில் உடல் தகுதி விஷயத்தில் பெரிய அளவில் 'ரிஸ்க்' எடுக்கமாட்டோம்' என்றார். மேலும் அவர், 'சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கிரிக்கெட் விளையாடுவதற்கு அருமையான ஒரு இடம் இந்தியா. நாளை (இன்று) உலகக் கோப்பைபோட்டி தொடங்குவதை நினைத்து உற்சாகத்தில் இருக்கிறோம்' என்றும் கூறினார்.
மொத்தத்தில் இரு பலம் பொருந்திய அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
மைதானம் எப்படி?
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான ஆமதாபாத்தில் இதுவரை 26 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தென்ஆப்பிரிக்க அணி 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுக்கு 365 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2006-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜிம்பாப்வே 85 ரன்னில் சுருண்டது இந்த மைதானத்தில் குறைந்த பட்சமாகும். 15 சதங்கள் பதிவாகியுள்ளன.
நியூசிலாந்து அணி இங்கு ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 1996-ம்ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்தை 11 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்ததும் அடங்கும்.
ஆடுகளத்தன்மை பேட்டிங்குக்கு ஓரளவு சாதகமாக இருக்கும். அத்துடன் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் கைகொடுக்கலாம். வானிலையை பொறுத்தவரை மழை ஆபத்து இல்லை.
பிற்பகல் 2 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் அல்லது ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்.
நியூசிலாந்து: டிவான் கான்வே, வில் யங், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம் அல்லது ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர், சோதி, மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதுவரை...
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இதுவரை 95 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 44-ல் வெற்றி பெற்றன. 3 ஆட்டம் சமன் ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் 10 முறை மோதியுள்ளன. இதில் 5-ல் நியூசிலாந்தும், 4-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. மற்றொரு ஆட்டம் சமன் ஆனது.