உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்


உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து- நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
x

சாம்பியன்ஸ் கோப்பை தகுதி இலக்கை அடைய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிபெற தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கும் 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளுக்கும் இது சம்பிரதாய மோதல் தான்.

ஆனால் இந்த உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே 2025-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த ஆட்டம் இரு அணிக்கும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே புள்ளி பட்டியலில் ஏற்றம் கண்டு சாம்பியன்ஸ் கோப்பை தகுதி இலக்கை அடைய இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் அனைத்து ஆட்டங்களிலும் இங்கிலாந்தே வெற்றி கண்டுள்ளது.

7 ஆட்டங்களில் ஆடியுள்ள இங்கிலாந்து 1 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து அணி உள்ளது. அதேவேளையில் 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளை கண்டுள்ள நெதர்லாந்து இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் விளையாடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story