உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை
x

Image Courtesy : AFP

தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளன.

சென்னை,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அக்டோபர் 8-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து அக்டோபர் 11-ந்தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டமும், அக்டோபர் 19-ந்தேதி புனே எம்.சி.ஏ. மைதானத்தில் இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டமும் நடைபெறுகிறது.

இந்த 3 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. 'புக் மை ஷோ' இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடங்கிய சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

தொடர்ந்து இந்திய அணி விளையாடும் ஆட்டங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற உள்ளது. அதன்படி தர்மசாலாவில் அக்டோபர் 22-ந்தேதி நடக்கும் இந்தியா-நியூசிலாந்து ஆட்டம், லக்னோவில் அக்டோபர் 29-ந்தேதி நடக்கும் இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் மற்றும் மும்பையில் நவம்பர் 2-ந்தேதி நடக்கும் இந்தியா-இலங்கை இடையிலான ஆட்டம் ஆகிய 3 போட்டிகளுக்கு இன்று டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து பெங்களுரு மற்றும் கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டங்களுக்கு செப்டம்பர் 2-ந்தேதியும், ஆமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3-ந்தேதியும் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story