சி.எஸ்.கே. அணியில் எப்போதும் அதை செய்ததில்லை... அதனாலேயே நாங்கள் - சுரேஷ் ரெய்னா


சி.எஸ்.கே. அணியில் எப்போதும் அதை செய்ததில்லை... அதனாலேயே நாங்கள் - சுரேஷ் ரெய்னா
x

image courtesy: AFP

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை அதிகபட்சமாக சென்னை, மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல். கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடரில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன.

ஆனால் இதே தொடரில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் கடந்த 16 வருடங்களாக கடுமையாக போராடியும் இதுவரை ஒரு கோப்பையை கூட முத்தமிட முடியாமல் திணறி வருகின்றன.

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அணிகள் இப்போது வரை கோப்பையை வென்றதில்லை என சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"சென்னை எப்போதும் பார்ட்டியில் ஈடுபட்டதில்லை. அதனாலேயே அவர்கள் வெற்றிகரமாக இருக்கின்றனர். ஆனால் பார்ட்டியில் ஈடுபட்ட 2 - 3 ஐ.பி.எல். அணிகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை. (அப்போது பெங்களூரு அணியை சொல்கிறீர்களா என்று தொகுப்பாளர் கேட்டார்). இல்லை இதுவரை கோப்பையை வெல்லாத சில அணிகள் கண்டிப்பாக அதிக பார்ட்டியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

சி.எஸ்.கே. அணியில் நாங்கள் எப்போதும் அதை செய்ததில்லை. அதனாலேயே நாங்கள் 5 ஐபிஎல் கோப்பை மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றோம். மும்பையும் 5 கோப்பைகளை வென்றுள்ளது. இரவு நேரத்தில் பார்ட்டியில் ஈடுபட்டால் எப்படி மதிய நேர போட்டியில் விளையாட முடியும். எனவே சி.எஸ்.கே. அணி வீரர்கள் எப்போதும் இரவு நேரத்தில் பார்ட்டி செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டோம்.

நாங்கள் இந்தியாவுக்காகவும் விளையாடுகிறோம் என்பதை மனதில் எப்போதும் வைத்திருந்தோம். ஒருவேளை பார்ட்டியில் ஈடுபட்டு நான் சிறப்பாக விளையாடாமல் போனால் பின்னர் எப்படி என்னுடைய கேப்டன் என்னை தேர்ந்தெடுப்பார்? இருப்பினும் தற்போது ஓய்வு பெற்று விட்டேன். இப்போது என்னால் பார்ட்டியில் கொண்டாட முடியும்" என்று கூறினார்.


Next Story