டெல்லிக்கு எதிரான தோல்வி: லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியது என்ன?


டெல்லிக்கு எதிரான தோல்வி: லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியது என்ன?
x

image courtesy: PTI

தினத்தந்தி 13 April 2024 7:25 AM GMT (Updated: 13 April 2024 7:32 AM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியிடம் லக்னோ தோல்வியடைந்தது.

லக்னோ,

கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி தோல்வியடைந்தது.

அதன்படி லக்னோவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி 18.1 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேட்டியளித்த லக்னோ அணியின் கே.எல் ராகுல் கூறுகையில் :

"இந்த போட்டியில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். நல்ல துவக்கம் இருந்தும் எங்களால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. 180 ரன்கள் வரை அடித்திருந்தால் வெற்றிக்கு போதுமான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த மைதானத்தில் உள்ள தன்மையை பயன்படுத்தி குல்தீப் யாதவ் எங்கள் அணியின் முக்கிய வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்துவிட்டார்.

அதேபோன்று டெல்லி அணி சார்பாக ஜேக் பிரேசர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து பந்துகளையும் அவர் அடித்து ஆடவே நினைத்தார். அவரது இந்த இன்னிங்ஸ் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேபோன்று பவர்பிளேவிலேயே வார்னர் விக்கெட்டை நாங்கள் வீழ்த்தி விட்டோம். மேலும் பவர்பிளேவிற்கு பிறகு இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தி விட்டோம். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்தனர். ஜேக் பிரேசர் கேட்சை தவறவிட்டது பெரிய இழப்பாக மாறியது" என்று கூறினார்.


Next Story