டெல்லி அசத்தல் பந்துவீச்சு; மும்பை 109 ரன்கள் சேர்ப்பு...!


டெல்லி அசத்தல் பந்துவீச்சு; மும்பை 109 ரன்கள் சேர்ப்பு...!
x

Image Courtesy: @wplt20

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும். இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி உ.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்டிகா பாடியா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் யாஷ்டிகா பாடியா 1 ரன், மேத்யூஸ் 5 ரன், அடுத்து வந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் இணைந்தனர். இதில் அமெலியா கெர்ரும் 8 ரன்னில் வீழ்ந்தார். பூஜா வஸ்த்ரகர், கேப்டன் ஹர்மன்பிரீத்துடன் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ரகரால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவர் 19 பந்தில் 26 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து இஸ்ஸி வோங் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை கடைப்பிடித்த ஹர்மன்பிரீத் 23 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆட உள்ளது.


Next Story