டெல்லி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் முன்னிலை
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடிபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானத்தை கடைபிடித்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கவாஜா அரைசதம் அடித்தார். நிதானமாக விளையாடிய வார்னர் 15 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழக்கூடிய ஸ்டீவ் ஸ்மித்தும், லபுஷேனும் அஸ்வினின் சுழலில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். லபுஷேன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த டிரவிஸ் ஹெட், 12 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வீசிய பந்தில் கேட்ச் ஆனார். அலெக்ஸ் கேரி, ரன் ஏதுமின்றி அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பீட்டர் ஹெண்ட்ஸ்கோம் மற்றும் பேட் கம்மின்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் கம்மின்ஸ் 33 ரன்களில் வெளியேற, ஜடேஜாவின் பந்துவீச்சில் டி.மர்பி ரன் ஏதுமின்றி போல்ட் ஆனார். தொடர்ந்து லியான் மற்றும் எம்.கஹ்னேமான் ஆகியோரின் விக்கெட்டுகளை ஷமி சாய்த்தார். பீட்டர் ஹெண்ட்ஸ்கோம்(72) இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியாக முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 78.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஷா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். இவர்கள் முறையே 13 மற்றும் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் முன்னிலையில் உள்ளது.