பெங்களூருவை வீழ்த்தி டெல்லி வெற்றி: அமெரிக்க வீராங்கனை 5 விக்கெட் சாய்த்து அசத்தல்...!


பெங்களூருவை வீழ்த்தி டெல்லி வெற்றி: அமெரிக்க வீராங்கனை 5 விக்கெட் சாய்த்து அசத்தல்...!
x

Image Courtesy: @wplt20

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது. தொடரின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

முதலவாது ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மெக் லானிங்கும், ஷபாலி வர்மாவும் களம் புகுந்தனர்.

அதிரடியில் மிரட்டிய இந்த இணையால் அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் ஷபாலி 84 ரன், மெக் லானிங் 72 ரன், மரிசான் கேப் 17 பந்துகளில் 39 ரன்னும் குவித்தனர். பெங்களூரு தரப்பில் ஹெதர் நைட் 2 விக்கெட்டுகள் வீத்தினார். இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த மந்தனா 35 ரன், ஷோபி டெவைன் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த எல்லிஸ் பெர்ரி 31 ரன், திஷா கசட் 9 ரன், ரிச்சா கோஷ் 2 ரன், கனிகா அஹுஜா 0 ரன், ஆஷா ஷோபனா 2 ரன் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 96 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கிடையில் களம் புகுந்த ஹெதர் நைட் அதிரடியில் மிரட்டினார். அதிரடியில் மிரட்டிய ஹெதர் நைட் 21 பந்தில் 34 ரன் எடுத்திருந்த நிலையில் தாரா நோரிஸ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டையும் சேர்த்து அமெரிக்காவை சேர்ந்த தாரா நோரிசுக்கு இந்த ஆட்டத்தில் இது 5வது விக்கெட்டாக அமைந்தது.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அமெரிக்காவை சேர்ந்த தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் உபி வாரியர்ஸ்-குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.



Next Story