தோனி மேலும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா விருப்பம்


தோனி மேலும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா விருப்பம்
x

கோப்புப்படம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தோனி மேலும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரெய்னா கூறியுள்ளார்.

சென்னை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் இந்த சீசனில் பாதியிலேயே அவர் புதிய கேப்டனை நியமிக்க வாய்ப்புள்ளது.

அவருடன் இணைந்து நீண்டகாலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இது குறித்து கூறியதாவது, தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவர் மேலும் 5 ஆண்டுகளோ அல்லது குறைந்தது 2-3 வருடங்களாவது தொடர்ந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். அவரது எதிர்கால திட்டமிடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

இப்போதைக்கு தோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக எழுகிறது. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் கூட அவர் அணியின் ஆலோசகராகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருப்பார்.

ஆனால் அடுத்த கேப்டனாக யாரை காட்டப்போகிறார் என்பதே மிகப்பெரிய கேள்வி. இந்த வகையில் சென்னை அணிக்கு இது முக்கியமான ஆண்டாக இருக்கும். யார் மீது தோனியின் பார்வை விழப்போகிறது? என்னை கேட்டால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார். இந்த ஆண்டு தோனியை விட சென்னை அணிக்கே மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கும்.

ஏனெனில் அவர் யாரை துணை கேப்டனாக தேர்வு செய்யப்போகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஒரு வேளை, 2008-ம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வருகிறேன். இனி நீங்கள் அணியை பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஓய்வறையில் இருக்கிறேன் என்று கூட சொல்வதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story