கேப்டன் பதவி மாற்றத்திற்கு பிறகு ரோகித்துடன் பேசினீர்களா? என்ற கேள்விக்கு பாண்ட்யா அளித்த பதில்


கேப்டன் பதவி மாற்றத்திற்கு பிறகு ரோகித்துடன் பேசினீர்களா? என்ற கேள்விக்கு பாண்ட்யா அளித்த பதில்
x

image courtesy: AFP 

தினத்தந்தி 18 March 2024 4:23 PM GMT (Updated: 19 March 2024 3:29 AM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சி.எஸ்.கே - ஆர்.சி.பி. அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 8 மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார். கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக மட்டும் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஒருபுறம் ஹர்திக் பாண்ட்யா இதைப்பற்றி எவ்வித கருத்தையும் பேசாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது ஹர்திக், ரோகித் சர்மா குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியது பின்வருமாறு:-'ரோகித் சர்மாவின் கை இந்த சீசன் முழுவதும் என் தோளில் இருக்கும் என்று எனக்கு தெரியும். அவரது கேப்டன்சியின் கீழ் நான் 10 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை என்று கூறினார்.

மேலும் கேப்டன் பதவி மாற்றத்திற்கு பிறகு ரோகித்துடன் பேசினீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாண்ட்யா கூறுகையில் : ஆமாம் மற்றும் இல்லை. அவர் இந்திய கேப்டனாக அதிகப்படியான சுற்றுப் பயணங்களை சமீபத்தில் மேற்கொண்டதால் அவருடன் பேச எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அவர் மும்பை அணியுடன் இணையும்போது நிச்சயம் நான் பேசுவேன்' என்று கூறினார்.


Next Story