உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்பி பயிற்சி: ரோகித் சர்மா பேட்டி


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்பி பயிற்சி:  ரோகித் சர்மா பேட்டி
x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்கு முன்கூட்டியே சில வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப முயற்சிப்போம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஆமதாபாத்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொடரை வென்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது மகிழ்ச்சி. வழக்கத்துக்கு மாறாக இது மிகவும் கடினமான தொடராக இருந்தது. அணியில் சில முக்கியமான வீரர்கள் இல்லாவிட்டாலும் கூட சாதித்து இருக்கிறோம். வீரர்களின் செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது.

விராட் கோலி உடல்நலக்குறைவோடு இந்த இன்னிங்சை பொறுமையுடன் விளையாடியதாக அவரது மனைவி அனுஷ்கா சர்மா கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவருக்கு கொஞ்சம் இருமல் இருந்தது. மற்றபடி மோசமான உடல்நலப்பிரச்சினை எதுவும் கிடையாது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறோம். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவது எங்களுக்கு சிக்கலான ஒரு நிலைமை தான். ஐ.பி.எல்.-ல் ஆடும் வீரர்களில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். தேவையான ஆலோசனை வழங்குவதுடன், அவர்களின் பணிச்சுமையை கண்காணிப்போம். அதற்கு ஏற்ப முடிவுகளை எடுப்போம்.

முன்கூட்டியே அனுப்புவோம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவது மிகவும் முக்கியம். ஐ.பி.எல்.-ல் மே 21-ந்தேதியுடன் 6 அணிகள் பிளே-ஆப் வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறிவிடும். அந்த சமயத்தில் எந்தெந்த வீரர்கள் அணித்தேர்வுக்கு தயாராக இருக்கிறார்களோ அவர்களை முடிந்த வரை முன்கூட்டியே இங்கிலாந்துக்கு அனுப்பி தயார்படுத்த முயற்சிப்போம். அதுமட்டுமின்றி நேரம் கிடைத்தால் ஐ.பி.எல். தொடரின் போது எல்லா வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் டியுக் வகை சிவப்பு பந்தை (இங்கிலாந்தில் டெஸ்டுக்கு பயன்படுத்தப்படும் பந்து) கொடுத்து பயிற்சியில் ஈடுபடும்படி சொல்வோம்.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உலகம் முழுவதும் நிறைய கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அதனால் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை இரு அணிக்கும் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்று சொல்லமாட்டேன். ஆனால் இந்திய அணிக்கு இந்தியாவிலும், ஆஸ்திரேலிய அணிக்கு ஆஸ்திரேலியாவிலும் விளையாடுவது மாதிரி இருக்காது. கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். அதற்கு தகுந்தபடி தயாராவோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


Next Story