முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி...!


முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி...!
x

Image Courtesy: @ACBofficials

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் இப்ராகிம் ஜட்ரான் 98 ரன்கள் எடுத்தார்.

ஹம்பாந்தோட்டை,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.இதில் நிசாங்கா 38 ரன், கருணாரத்னே 4 ரன், அடுத்து வந்த குசல் மென்டிஸ் 11 ரன், மேத்யூஸ் 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அசலங்கா , டி சில்வா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இதில் டி சில்வா 51 ரன், அடுத்து வந்த ஷனகா 17 ரன் , ஹேமந்தா 22 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய அசலங்கா 91 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 10 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து இப்ராகிம் ஜட்ரானுடன் ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரஹ்மத் ஷா 55 ரன்னிலும், சதத்தை நெருங்கிய இப்ராகிம் ஜட்ரான் 98 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஹஸ்மத்துல்லா ஷாகிடி மற்றும் முகமது நபி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் ஹஸ்மத்துல்லா ஷாகிடி 38 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து நஜிபுல்லா ஜட்ரான் முகமது நபியுடன் ஜோடி சேர்ந்தார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூக்லம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.


Next Story