முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்


முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
x

Image Courtacy: BCCITwitter

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.

மொகாலி,

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற கையுடன் இந்திய அணி இந்த போட்டியில் கால் பதிக்கிறது. உலகக் கோப்பை போட்டி பணிச்சுமையை கருத்தில் கொண்டு கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு முதல் 2 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பை லோகேஷ் ராகுல் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூர்யகுமார் யாதவ் ஜொலிப்பாரா?

கேப்டன் ரோகித் சர்மா இடம் பெறாததால் தொடக்க வீரராக இஷான் கிஷன், சுப்மன் கில்லுடன் களம் காணுவார் என்று தெரிகிறது. முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு திரும்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக தனது உடல் தகுதியை நிரூபிக்க அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும். இதேபோல் 20 ஓவர் போட்டியில் அதிரடியில் கலக்கும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியை பொறுத்த வரையில் போதிய ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்த அவர் தனது இயல்யான சரவெடி ஆட்டத்தை இந்த முறை காண்பிப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இருந்து விலகியதால் அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், 19 மாத இடைவெளிக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பி இருக்கும் ஆர்.அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். ஆல்-ரவுண்டராக ஜொலித்தால் இவர்களில் ஒருவருக்கு உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் வாசல் கதவு திறக்க வாய்ப்புள்ளது.



கம்மின்ஸ்

அண்மையில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு களம் காணும் முதல் தொடர் இதுவாகும். காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க தொடரில் இடம் பெறாத கேப்டன் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் திரும்பி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு வலுசேர்க்கும். ஆனால் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முதலாவது ஆட்டத்தில் ஆடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், 'எனக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணமாகி விட்டது. மூன்று ஆட்டங்களிலும் நான் ஆடுவேன் என்று நம்புகிறேன். ஸ்டீவன் சுமித் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் நாளைய (இன்றைய) ஆட்டத்தில் ஆடுவார். மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் முதலாவது ஆட்டத்தில் ஆடவில்லை. அவர்கள் விரைவில் அணிக்கு திரும்புவார்கள். தென்ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்ட லபுஸ்சேனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆடம் ஜம்பா ரன்னை கட்டுப்படுத்துவதுடன் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளும் வீழ்த்தக்கூடியவர். இந்தியாவுக்கு எதிரான தொடரை வெல்ல விரும்புகிறோம். அதேநேரத்தில் உலகக் கோப்பை போட்டி நெருங்குவதால் வீரர்கள் சோர்வடையாமல் பார்த்து கொள்வதிலும் கவனம் செலுத்துவோம். வீரர்கள் கலவையில் வித்தியாசமான முயற்சி செய்வோம். இதனால் சிலருக்கு புதிதாக வாய்ப்பு கிடைக்கும்' என்றார்.

உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அரங்கேறும் இந்த போட்டி தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக தங்களது அணியின் கலவையை கடைசியாக சோதித்து பார்த்து தவறுகளை களைந்து வலுவாக சீரமைக்க நல்லதொரு வாய்ப்பாகும்.



நம்பர் ஒன் இடம் யாருக்கு?

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை வென்றால் 'நம்பர் ஒன்' அந்தஸ்துடன் உலகக் கோப்பை போட்டியில் அடியெடுத்து வைக்க முடியும். இதேபோல் ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் தரவரிசையில் முதலிடத்தை தனதாக்க முடியும். மேலும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தால் பாகிஸ்தான் அணி 'நம்பர் ஒன்' இடத்தில் தொடருவதில் பிரச்சினை இருக்காது. அப்போது இந்திய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்படும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்ட இந்திய அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தீவிரமாக வரிந்து கட்டும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கத்தை தொடர்ந்து நம்பர் ஒன் அரியணையை சொந்தமாக்க ஆர்வம் காட்டும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 146 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 82-ல் ஆஸ்திரேலியாவும், 54-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

மொகாலியில் கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 359 ரன் இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்குக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் மீண்டும் ரன் மழைக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகல் 1.30 மணிக்கு...

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்பென்சர் ஜான்சன் அல்லது தன்வீர் சங்கா, ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.


அணியில் சூர்யகுமார் இடத்துக்கு அச்சுறுத்தல் இல்லை -டிராவிட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மொகாலியில் நேற்று அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடருக்கு அஸ்வின் தகுதி தேர்வுக்காக அழைக்கப்பட்டு இருக்கிறார் என்று நான் சொல்லமாட்டேன். அவருடைய ஆட்ட தரம் எங்களுக்கு தெரியும். இந்த வடிவிலான (50 ஓவர்) போட்டியில் விளையாட அவருக்கு இது ஒரு வாய்ப்பாகும். அவருக்கு இரண்டு அல்லது மூன்று ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். அஸ்வினை போன்ற வீரர் நம்மிடம் இருந்தால் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் நம்பிக்கையுடன் விளையாட வைக்கலாம்.

நீண்ட காலமாக 50 ஓவர் போட்டியில் விளையாடாத அவர் தன்னை சோதித்து பார்க்க இது நல்ல வாய்ப்பாகும். அனுபவம் வாய்ந்த அஸ்வின் 8-வது வரிசையில் பேட்டிங்கிலும் பங்களிக்க கூடியவர் . வாய்ப்புகள் உருவானால் அவர் நிச்சயம் எங்கள் திட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பார். உலகக் கோப்பைக்கான இறுதி அணியில் இடம் குறித்து சூர்யகுமார் கவலைப்பட தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.

அவரது இடத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. தரமும், திறமையும் மிக்க அவருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவரால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். அவருக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ரோகித் சர்மா, விராட்கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு உலகக் கோப்பை போட்டிக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது தெரியும்' என்று தெரிவித்தார்.


Next Story