முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா பெண்கள் அணி வெற்றி..!


முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா பெண்கள் அணி வெற்றி..!
x

image courtesy: BCCI Women twitter

ஆஸ்திரேலியா 46.3 ஓவர்களில் 285 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை,

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மும்பையில் நடக்க உள்ளன. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து ரன்களை சேர்த்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 282 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 82 ரன்கள் அடித்தார். இறுதி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடிய பூஜா வஸ்த்ரகர் 46 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் கேப்டன் அலிசா ஹீலி (0) முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடி தங்கள் அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். போபி லிட்ச்பீல்டு (78 ரன்கள்), எலிஸ் பெர்ரி (75 ரன்கள்), தாலியா மெக்ராத் (68 ரன்கள்) அரைசதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 285 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா விரட்டிப்பிடித்த 2-வது அதிகபட்ச இலக்கு இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.


Next Story