பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 242/6
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.
காலே,
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கத்தில் இலங்கை அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்தது.
நிஷான் மதுஷ்கா 4 ரன்னிலும், குஷல் மெண்டிஸ் 12 ரன்னிலும், கருணாரத்னே 29 ரன்னிலும், ஷாஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். சண்டிமால் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடினர். மேத்யூஸ் 64 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வாவுடன் சமாரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் வெகு நேரத்திற்கு பிறகு தொடங்கியது. 65.4 வது ஓவரில் சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.