முதலாவது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி..?! தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்


முதலாவது டெஸ்ட்: வரலாறு படைக்குமா இந்திய அணி..?! தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 26 Dec 2023 12:11 AM GMT (Updated: 26 Dec 2023 7:09 AM GMT)

ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோர் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஆடும் முதல் போட்டி இதுவாகும்.

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஆடும் முதல் போட்டி இதுவாகும். இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான். 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை. 7 முறை தொடரை பறிகொடுத்திருக்கும் இந்திய அணி 2010-11-ம் ஆண்டில் மட்டும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அசாருதீன், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், டோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களால் முடியாத அந்த 31 ஆண்டு கால ஏக்கத்தை ரோகித் சர்மா படை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் என்று தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இங்குள்ள உயிரோட்டமான ஆடுகளத்தில் தாக்குப்பிடித்து ஆடுவது அவ்வளவு சுலபமல்ல. பந்தை நன்கு தீர்க்கமாக கணித்து ஆட வேண்டியது அவசியமாகும். பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணிக்கு வலுசேர்க்கிறார்கள். இது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் என்பதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அனேகமாக அஸ்வின் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை சொந்த மண்ணில் எப்போதும் பலமிக்கவர்களாக விளங்குவார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். கேப்டன் பவுமா, மார்க்ரம், முன்னாள் கேப்டன் டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், டோனி டி ஜோர்ஜி ரன் வேட்டை நடத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் ரபடா, இங்கிடி, யான்சென் மிரட்டுவார்கள்.

இங்கு முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதனால் எப்போது போட்டி தொடங்கினாலும் வேகப்பந்து வீச்சாளர்களின் கையே சற்று ஓங்கி நிற்கும். இது 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்: -

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன் அல்லது டேவிட் பெடிங்ஹாம், கைல் வெரைன், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ஜெரால்டு கோட்ஜீ, ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.


Next Story