இந்த போட்டியில் 2 எளிதான திட்டங்களை பின்பற்றி அசத்தினேன் - ஜடேஜா


இந்த போட்டியில் 2 எளிதான திட்டங்களை பின்பற்றி அசத்தினேன் - ஜடேஜா
x

image courtesy; twitter/@BCCI

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ராஜ்கோட்,

ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (214), சுப்மன் கில் 91 ரன்கள், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மெகா இலக்கை இங்கிலாந்து சேசிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊரில் உள்ள ராஜ்கோட் மைதானத்தைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பதால் பேட்டிங்கில் பந்தை பார்த்து அடிப்போம், பவுலிங்கில் நல்ல இடத்தில் போட்டால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்ற 2 எளிதான திட்டத்தை பின்பற்றி அசத்தியதாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;- "கடினமான சூழ்நிலையில் நாங்கள் இருந்தபோது நான் ரோகித் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தேன். அந்த நேரத்தில் அதிகமாக பதறாமல் பந்தை பார்த்து என்னுடைய ஷாட்டுகளை அடிக்க முயற்சித்தேன். குறிப்பாக சுமாரான பந்துகளை பார்த்து அடித்தேன். இந்த பிட்ச் பற்றி எனக்கு தெரியும். அதில் முதலில் பேட்டிங் செய்தால் ரன்கள் குவிப்பதற்கு நன்றாக இருக்கும்.

2வது பகுதியில் அது சுழல ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் டாஸ் வென்றதும் முதல் பகுதியில் நாம் நன்றாக பேட்டிங் செய்து இரண்டாவது பகுதியில் பந்து வீச்சில் அசத்துவோம் என்று நினைத்தோம். இந்த பிட்ச்சில் உங்களுக்கு எளிதாக விக்கெட்டுகள் கிடைக்காது. இதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதே சமயம் நீங்கள் நல்ல இடங்களில் பந்து வீசினால் அதற்கு பரிசாக விக்கெட்டுகள் கிடைக்கும்" என்று கூறினார்.


Next Story