கைவிரலில் எலும்பு முறிவு: அடுத்த 3 ஆட்டங்களை தவறவிடும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் உள்பட அடுத்த 3 ஆட்டங்களை கேன் வில்லியம்சன் தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (78 ரன்கள்) ரன் எடுக்க ஓடுகையில், வங்காளதேச வீரர் எறிந்த பந்து அவரது இடது கை விரலில் தாக்கியது. இதனால் வலியால் துடித்த வில்லியம்சன் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி பாதியில் வெளியேறினார்.
போட்டி முடிந்த பிறகு வில்லியம்சனுக்கு 'எக்ஸ்ரே' எடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தின் போது கால் முட்டியில் காயம் அடைந்து 7 மாதத்துக்கு பிறகு முழு உடல் தகுதியை எட்டி களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே வில்லியம்சனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் அவர் அடுத்த 3 ஆட்டங்களில் (18-ந் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 22-ந் தேதி இந்தியாவுக்கு எதிராக, 28-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) விளையாட முடியாது. இருப்பினும் அவர் உலகக் கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியினருடன் தொடர்ந்து இருப்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1-ந் தேதி நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு உடல் தகுதியை எட்டி அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வில்லியம்சன் விரைவில் குணமடைந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் விளையாடுவார் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அவருக்கு மாற்றாக டாம் பிளன்டெல் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.