இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவது அவசியம் - ஆகாஷ் சோப்ரா
ஷமி, சிராஜ் போல முகேஷ் குமார் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுவார்.
புதுடெல்லி,
9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
இந்நிலையில் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ஏனெனில் தற்போதைய அணியில் டெத் ஓவர்களில் பும்ராவை தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-
"பும்ரா தவிர்த்து டெத் ஓவர்களில் அசத்தக்கூடிய சிறந்த பவுலர்கள் நம்மிடம் இல்லை. அது நமது அணிக்கு டி20 உலகக்கோப்பையில் டெத் ஓவர்களில் யார் பந்து வீசுவார்கள் என்ற பிரச்சினையை ஏற்படுத்தலாம். சில போட்டிகளில் ரிவர்ஸ் ஸ்விங் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதை அர்ஷ்தீப் சிங் செய்யக்கூடியவர் கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இறுதி ஓவரில் அவர் நன்றாக பந்து வீசினார். ஆனால் கடந்த ஒரு வருடமாகவே அவர் பெரும்பாலான போட்டிகளில் கடைசி கட்ட ஓவர்களில் அசத்தவில்லை. டெத் ஓவரில் ஆவேஷ் கான் அசத்த மாட்டார். ஷமி, சிராஜ் போல முகேஷ் குமார் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுவார். எனவே டெத் பவுலிங் இந்திய அணிக்கு கவலையளிப்பதாக இருக்கிறது. அதனால் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்த குறையை சரி செய்ய வேண்டும்" என்று கூறினார்.