எனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சுரேஷ் ரெய்னா


எனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சுரேஷ் ரெய்னா
x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சுரேஷ் ரெய்னா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்த நாள். அவர் 41ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 2004-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் விளையாடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் தோனி. இந்திய அணிக்காக பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்துவிதத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன்.

ஒரு முழுமையான கிரிக்கெட்டரான தோனி, தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருவதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது,

எனது மூத்த சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனது மிகப்பெரிய ஆதரவாளராகவும், வழிகாட்டியாகவும் இருப்பதற்கு நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பார்.

அன்புமிக்க மாஹி பாய். உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story