ரசிகர்களின் கருத்துகளால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் - ராபின் உத்தப்பா


ரசிகர்களின் கருத்துகளால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் - ராபின் உத்தப்பா
x

image courtesy: PTI

ரசிகர்கள் தெரிவித்து வரும் கருத்துகளால் ஹர்திக் பாண்ட்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தொடங்கிய நிலையில், இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் 5 முறை சாம்பினான மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் 4 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து மும்பை , தனது 8-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று விளையாடி வருகிறது.

நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யாவின் மீது ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் கேலி, கிண்டல்கள் செய்வதை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக பாண்ட்யா இந்தியாவின் எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் அவருக்கு எதிராக ரசிகர்கள் மைதானத்திலேயே கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் தெரிவித்து வரும் கருத்துகளால் ஹர்திக் பாண்ட்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை ஹர்திக் பாண்ட்யா தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நல்ல வீரர். எந்த அணிக்காக அவர் விளையாடினாலும் உயிரைக் கொடுத்து விளையாடக் கூடியவர். அவரின் கிரிக்கெட் எதிர்காலம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது கூட அவருக்கு நன்றாக தெரியும்.

தற்போது ரசிகர்கள் கிண்டல் செய்வது அவரை மனதளவில் பாதித்துள்ளது. எந்த ஒரு மனிதரையும் இது போன்ற சம்பவங்கள் பாதிக்கும். தற்போது மனரீதியான பிரச்சனையை பாண்டியா சந்தித்துள்ளார். ரசிகர்களின் எமோஷனை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு தனிப்பட்ட வீரரின் மீது இவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story