ஹர்திக் பாண்ட்யா போராட்டம் வீண்... 5 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி..!
ஐபிஎல்-லில் 44-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
அகமதாபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 44-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், கேப்டன் டேவிட் வார்னர் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் வார்னர் 2 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரூசோவ் 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 1 ரன்னிலும், பிரியம் கர்க் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தொடர்ந்து வந்த அக்சர் படேல் , அமான் கான் இணைந்து சிறப்பாக விளையாடினர். நிலைத்து ஆடி இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அக்சர் படேல் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ரிபல் படேல் , அமான் கான் இருவரும் இனைந்தனர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர் . சிறப்பாக விளையாடிய அமான் கான் அரைசதம் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 8விக்கெட் இழப்புக்கு 130ரன்கள் டெல்லி எடுத்தது. குஜராத் சார்பில் ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து131 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சகாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சகா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
சுப்மன் கில் 6 ரன்கள் எடுத்த நிலையில் கேட்சாகி வெளியேறினார். விஜய் சங்கர் 6 ரன்னிலும், மில்லர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினர். தொடக்கத்திலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி தடுமாடி வந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், அபினவ் மனோகரும் சரிவில் இருந்து மீட்டனர்.
ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்செல்வதற்காக இருவரும் நிதானமாக விளையாடினர். அபினர் 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில், கலீல் அகமது பந்துவீச்சில் அவுட்டானார். பொறுப்புடனும் நிதானத்துடனும் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 44 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
கடைசி இரு ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19 வது ஓவரில் திவாட்டியா 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரை சிறப்பாக வீசிய அவர், ராகுல் திவாட்டியாவின் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன், அந்த ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
ஹர்திக் பாண்ட்யா கடைசி வரை களத்தில் இருந்தும், அணியை அவரால் வெற்றிபெறச்செய்யவில்லை. கடைசியில் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் கலீல் அகமது, இஷாந்த் சர்மா அதிகபட்சமாக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.