உலகக்கோப்பை: தொடக்க ஆட்டங்களை தவறவிடும் பாகிஸ்தான் வீரர் - ரசிகர்கள் கவலை
உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டங்களில் இந்த வீரர் விளையாடுவது சற்று கடினம் என கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளார்.
கொழும்பு ,
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அவர்களது பந்துவீச்சு. சீனியர் வீரர்களான நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிய காரணத்தால் அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட பந்து வீச்சு கூட்டணியை கொண்டு பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
நசீம் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோரில் நசீம் ஷா ஆசிய கோப்பை தொடரில் இருந்தே விலகி உள்ளார். இரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் காயம் அடைந்துள்ளதால் தற்போது உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹாரிஸ் மற்றும் நசீம் ஷா காயம் குறித்து கேப்டன் பாபர் ஆசம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
இப்போது எங்கள் திட்டத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. இருவரில் ஹாரிஸ் ரவூப் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக குணமடைந்துவிடுவார்.
அவர்கள் தொடக்கத்தில் சில போட்டிகளை தவறவிடுவார்கள் என நினைக்கிறேன். அவர்கள் எவ்வளவு சீக்கிரம் குணமடைவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் உலகக்கோப்பையின் பிற்பாதியில் நசீம் ஷா இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.