அவர் எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தார் அதனால்தான்... - சுனில் நரேன்


அவர் எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தார் அதனால்தான்... -  சுனில் நரேன்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 17 April 2024 6:58 AM GMT (Updated: 17 April 2024 6:59 AM GMT)

இந்த தொடரில் தொடக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார்.

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த ஐ.பி.எல் வரலாற்றில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்த சுனில் நரேன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடவில்லை.

இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கவுதம் கம்பீர் எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தார். அத்துடன் இந்த தொடரில் தொடக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story