அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் - சாய் கிஷோர் பேட்டி

Image Courtesy: AFP
ஆஷிஷ் நெஹ்ரா எங்களுடைய அணியில் பயமின்றி விளையாடக்கூடிய அழகான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்.
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி குஜராத் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் தெவேட்டியா 36 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னுடைய அணிக்காக எனது 120 சதவீதம் பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். 20 - 25 நாட்கள் கழித்து மீண்டும் விளையாடுகிறேன். எனவே களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடி என்னுடைய அனைத்தையும் அணிக்கு கொடுக்க விரும்பினேன்.
ஆஷிஷ் நெஹ்ரா எங்களுடைய அணியில் பயமின்றி விளையாடக்கூடிய அழகான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். மகிழ்ச்சியுடன் விளையாடுமாறு சொன்ன அவர் எனக்கு நிறைய சுதந்திரத்தை கொடுத்துள்ளார். பிட்ச்சில் கொஞ்சம் வேகத்தை மாற்றுவோம் என்று நினைத்து செயல்பட்டேன்.
அது எனக்கு அழகாக வேலை செய்தது. எங்கள் அணியில் இன்று அசத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். தெவே டியா மீண்டும் ஒரு முறை அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். ரஷித் கான், நூர் அகமது ஆகியோரும் அழகாக பந்து வீசினார்கள். இது எங்கள் அணியின் மொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு அவர் கூறினார்.