தோனி, கோலி அல்ல... இந்த ஐபிஎல் கிங் தான் எனது ரோல் மாடல் - ரிங்கு சிங்
ரிங்கு சிங் ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
மும்பை,
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அனைத்து ரசிகர்களையும் தனது அதிரடி ஆட்டத்தால் தன் பக்கம் ஈர்த்தவர் ரிங்கு சிங். கொல்கத்தா அணிக்காக இவரின் அதிரடி ஆட்டம் அந்த அணி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர் அடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தனது அபாரமனா ஆட்டத்தால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இந்நிலையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பெற வேண்டும் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். ஆனால் அவர் வெஸ்ட் இண்டீஸ் டி 20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.
அவர் அந்த தொடரில் இடம் பெறாததால் கண்டிப்பாக ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் ரிங்கு சிங் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் தங்களுடைய மாநிலத்தில் பிறந்து 2011 உலக கோப்பை உட்பட இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய சுரேஷ் ரெய்னா தான் தம்முடைய ரோல் மாடல் என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
என்னுடைய ரோல் மாடல் சுரேஷ் ரெய்னா. அவருடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். மேலும் ஐபிஎல் தொடரின் கிங்கான அவர் எப்போதும் எனக்கு நிறைய ஆலோசனைகளை கொடுத்து வருகிறார். அதே போல பஜ்ஜூ பா (ஹர்பஜன்) என்னுடைய கேரியரில் வளர்வதற்கு நிறைய உதவிகளை செய்துள்ளார்.
அவர்களுடைய ஆதரவுக்கு நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அவர்களைப் போன்ற பெரிய வீரர்கள் உங்களைப் பற்றி பேசும் போது அதுவே உங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.