பாகிஸ்தான் மக்களுக்கு உதவுங்கள் - முகமது ரிஸ்வான் கோரிக்கை


பாகிஸ்தான் மக்களுக்கு உதவுங்கள் - முகமது ரிஸ்வான் கோரிக்கை
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 3 Sep 2022 5:24 AM GMT (Updated: 3 Sep 2022 5:25 AM GMT)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என முகமது ரிஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்ஜா,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீக் சுற்றின் கடைசி ஆட்டம் நடைபெற்றது. இதில் குரூப் 'ஏ' பிரிவில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தில், ரிஸ்வான் 57 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவருக்கு விருது வழங்கும் போது பேசிய அவர் கூறியதாவது,

நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். பாகிஸ்தான் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. உங்கள் எல்லோரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவுங்கள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், கூடிய விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்"

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,200-க்கும் மேல் உள்ளது. வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10.57 லட்சம் வீடுகள் அழிந்துள்ளது/சேதமடைந்துள்ளன என அந்நாட்டு தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.


Next Story