கடைசி ஓவரில் ஜொலித்த ஹெட்மயர்...பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி


கடைசி ஓவரில் ஜொலித்த ஹெட்மயர்...பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி
x

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது

முல்லன்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முல்லன்பூரில் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடின.இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆடவில்லை. அவருக்கு பதிலாக சாம் கர்ரன் பஞ்சாப் அணியை வழிநடத்துகிறார். இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதர்வா தைடே 18 ரன்னிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து பேர்ஸ்டோவுடன் கேப்டன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ 15 ரன்னிலும், சாம் கர்ரன் 6 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் ஜித்தேஷ் சர்மா 29 ரன்னில் அவுட் ஆனார். இதையடுயடுத்து ப்ரப்சிம்ரன் சிங்கிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களம் புகுந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ரன்னும், ஜித்தேஷ் சர்மா 29 ரன்னும் எடுத்தனர்.ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , தனுஷ் கோட்யான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 56ரன்கள் சேர்த்த நிலையில் தனுஷ் கோட்யான் 24 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 18 ரன்களும் , ரியான் பராக் 18 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது . பஞ்சாப் அணியின் அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹெட்மயர் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.


Next Story