டி வில்லியர்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா!


டி வில்லியர்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த ஹிட்மேன் ரோகித் சர்மா!
x

image courtesy; twitter/@BCCI

உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டு முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதில் கில் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தில் அடித்த 2 சிக்சர்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 60 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஏபி டி வில்லியர்ஸ் 58 சிக்சர்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும். தற்போது அதனை தகர்த்து 'ஹிட்மேன்' ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் நடப்பு உலகக்கோப்பையில் ரோகித் சர்மா இதுவரை 24 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை உடைத்துள்ள ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் கேப்டனாக இயன் மோர்கன் 22 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அதனை தகர்த்து 'ஹிட்மேன்' புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆட்டத்தில் தற்போது வரை இந்தியா 37 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்களிலும் மற்றும் ராகுல் 22 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.


Next Story