'பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடியதை கவுரவமாக கருதுகிறேன்' - வஹாப் ரியாஸ்


பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடியதை கவுரவமாக கருதுகிறேன் - வஹாப் ரியாஸ்
x

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கராச்சி,

பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் 2008-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2019-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்ற வஹாப் ரியாஸ் கடைசியாக 2020-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்தார். அதன் பிறகு அவர் அணியில் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டியில் பெஷாவர் அணிக்காக விளையாடும் வஹாப் வெளிநாட்டு லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

கிரிக்கெட்டில் தீவிரமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் கால்பதித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண விளையாட்டு மந்திரி பொறுப்பை ஏற்றார்.

இந்த நிலையில் 38 வயதான வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஆனால் அவர் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இது குறித்து வஹாப் ரியாஸ் தனது டுவிட்டர் பதிவில், 'ஒரு நம்ப முடியாத பயணத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கு நன்றி. பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடியதை கவுரவமாக கருதுகிறேன். இந்த அத்தியாயத்தில் இருந்து விடைபெறும் தருணத்தில் 20 ஓவர் லீக் போட்டி தொடர்களில் புதிய சகாப்தத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் சிறந்த திறமையாளர்களுக்கு எதிராக போட்டியிடும் போது என்னால் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியும், உத்வேகமும் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்டில் ஆடி 83 விக்கெட்டும், 91 ஒருநாள் போட்டியில் 120 விக்கெட்டும், 36 இருபது ஓவர் போட்டியில் 34 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். 2011, 2015, 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடியுள்ளார். அதில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மொகாலியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தாலும், அவர் யுவராஜ்சிங், விராட்கோலி, டோனி உள்ளிட்ட வீரர்களின் விக்கெட்டை சாய்த்த விதத்தை எளிதில் மறந்து விட முடியாது. இதே போல் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிரட்டலாக பந்து வீசினார். அத்துடன் அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் 9-வது பவுலர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story