சமூக வலைதள விமர்சனங்களுக்கு என்னுடைய பேட்டால் பதிலடி கொடுத்துள்ளேன் - கே.எல்.ராகுல்
இன்று நான் சதம் அடித்துள்ளதால் மக்கள் என்னை பாராட்டுகின்றனர் என்று கே.எல்.ராகுல் கூறினார்.
செஞ்சூரியன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. இந்தியா தரப்பில் ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது.
தொடர்ந்து பேட்டிங் செய்த ராகுல் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 101 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இன்று தம்மை பாராட்டும் ரசிகர்கள் சில மாதங்களுக்கு முன்பாக மோசமாக திட்டியதாக கே.எல்.ராகுல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தம்முடைய வேலையில் கவனம் செலுத்தி விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், " இன்று நான் சதம் அடித்துள்ளதால் மக்கள் என்னை பாராட்டுகின்றனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் என்னை அனைவரும் திட்டினார்கள். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விமர்சனங்களுக்கு என்னுடைய பேட்டால் பதிலடி கொடுத்துள்ளேன். ஒரு வீரராகவும் மனிதராகவும் ஒவ்வொரு நாளும் நீங்கள் சவாலை சந்திக்கிறீர்கள்.
சமூக வலைதளங்கள் என்பது அழுத்தமான இடமாகும். இதுவும் விளையாட்டின் அங்கமாகும். ஆனால் இது என்னை பாதித்தது என்று நான் சொல்ல மாட்டேன். இதிலிருந்து நீங்கள் விலகியிருப்பது உங்களுடைய விளையாட்டிற்கும் மனதிற்கும் நல்லதாகும். அதே சமயம் விமர்சனங்களை யாராலும் முழுவதுமாக தவிர்க்க முடியாது. அது அனைவரையும் பாதிக்கக் கூடியது. ஒருவேளை யாராவது விமர்சனங்கள் தங்களை பாதிக்கவில்லை என்று சொன்னால் அது பொய்யாகும். அதற்கெல்லாம் பதிலாக என்னுடைய பேட்டை நான் பேச வைப்பேன்" என்று கூறினார்.