"வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்" - ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி


வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி
x

5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

அகமதாபாத்,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. குஜராத் பேட்டிங்கில், சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.

பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்தது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட ெடன்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய ஜடேஜா கூறியதாவது ,

"எனது சொந்த ஊரில் சொந்த மக்கள் முன்னிலையில் சென்னை அணிக்காக ஐந்தாவது முறை கோப்பையை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது அற்புதமான உணர்வு.. உண்மையில் இங்கு எங்களுக்கான ஆதரவு ஆச்சர்யத்தை கொடுத்தது. தாமதமான இரவிலும் மழை நிற்கும்வரை ரசிகர்கள் காத்திருந்தனர். சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும்.

இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடைசி நேரத்தில் எதுவாக இருந்தாலும் நான் கடினமாக ஆட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். . மோஹித் ஸ்லோ பால் அதிகம் வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன்.

இந்த வெற்றி தருணத்தில் சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். என்று பேசினார்.


Next Story