டி.வி.யில் அவருடைய பவுலிங்கை பார்த்து இப்போட்டியில் அசத்தினேன் - சிராஜ் பேட்டி


டி.வி.யில் அவருடைய பவுலிங்கை பார்த்து இப்போட்டியில் அசத்தினேன் - சிராஜ் பேட்டி
x

image courtesy;PTI

தினத்தந்தி 17 Feb 2024 2:08 PM GMT (Updated: 17 Feb 2024 2:14 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

ராஜ்கோட்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாளில் 196/2 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் அஸ்வின் இல்லாததால் 4 பவுலர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக முகமது சிராஜ் கூறியுள்ளார். மேலும் கடந்த போட்டியில் விளையாடாத தாம் டி.வி.யில் பும்ராவின் பவுலிங்கை பார்த்து இப்போட்டியில் அசத்தியதாகவும் சிராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் 3-வது நாள் முடிவில் பேசியது பின்வருமாறு;-

"நாங்கள் 4 பவுலர்கள் மட்டுமே இருப்பதால் எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. இங்கிலாந்து எங்களை அட்டாக் செய்யும் என்பதை நாங்கள் அறிவோம். அதே சமயம் நாங்கள் ஒன்றாக செயல்பட்டால் அவர்களும் தவறு செய்வார்கள் என்பதை அறிந்து செயல்பட்டோம். எனவே நாங்கள் பெரிய அளவில் எதையும் திட்டமிடவில்லை. அவர்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தோம்.

யார்க்கர் வீசுவது விக்கெட் எடுப்பதற்கான சிறந்த வழி என்பதை நான் அறிவேன். ஒரு ஓவரில் 6 டாட் பந்துகள் வீசுவது ஒரு பவுலருக்கு முக்கியமானதாகும். ஆனால் அது மிகவும் கடினமாகும். கடந்த டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த நான் அதை டி.வி.யில் பார்த்தேன். குறிப்பாக பும்ராவின் யார்க்கர் பந்துகளை ரசித்து பார்த்தேன். அதை மனதில் வைத்து இன்று என்னுடைய பந்து வீச்சில் நான் செயல்படுத்தினேன்" என்று கூறினார்.


Next Story