நானாக இருந்தால்.... மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் குறித்து யுவராஜ் சிங் அதிருப்தி


நானாக இருந்தால்.... மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் குறித்து யுவராஜ் சிங் அதிருப்தி
x

ரோகித் சர்மாவுக்கு இன்னும் ஒரு வருடம் மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு மேலும் ஒரு வருடம் கேப்டனாக மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் புதிய அணியாக இருந்த குஜராத் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சூழ்நிலையில் 2022 ஐ.பி.எல். கோப்பையை பாண்ட்யா வென்று கொடுத்ததாக யுவராஜ் கூறியுள்ளார்.

ஆனால் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை, கோடிக்கணக்கான ரசிகர்களுடன் மிகப்பெரிய அழுத்தமும் எதிர்பார்ப்பும் கொண்ட அணி என்று யுவராஜ் தெரிவித்துள்ளார். எனவே அந்த அணியில் இந்தியாவின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா போன்ற வீரர்களை தலைமை தாங்கி ஹர்திக் பாண்ட்யா, ஐ.பி.எல். கோப்பையை வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு;-

"ரோகித் சர்மா 5 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்றவர். அவரை நீக்கியது பெரிய முடிவு. அந்த இடத்தில் நானாக இருந்திருந்தாலும் பாண்ட்யா போன்ற ஒருவரைத்தான் கொண்டு வருவேன். ஆனால் அதற்கு முன் ரோகித் சர்மாவுக்கு ஒரு வருடம் வாய்ப்பு கொடுத்து ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமித்து மொத்த அணியும் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்பேன்.

வருங்காலத்தை பார்க்கும் மும்பை நிர்வாகத்தின் கண்ணோட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா இப்போதும் இருக்கும் நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு பெரியதாகும். பாண்ட்யா நல்ல திறமையைக் கொண்டுள்ளார். ஆனால் குஜராத்தின் கேப்டனாக இருப்பதை விட மும்பையின் கேப்டனாக இருப்பது அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் பெரிய அணி" என்று கூறினார்.


Next Story