ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி; 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
இந்தூர்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 158 ரன்னில் கட்டுப்படுத்திய இந்திய அணி வெற்றி இலக்கை 17.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஷிவம் துபே ஆட்டம் இழக்காமல் 60 ரன்கள் குவித்ததுடன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்து ஆட்டநாயகனாக தேர்வானார்.
ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் இப்ராகிம் ஜட்ரன், ரமனுல்லா குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபியும், பந்து வீச்சில் முஜீப் ரகுமான், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல்-ஹக்கும் வலுசேர்க்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து தொடரை வெல்ல இந்திய அணி முழு முனைப்புடன் செயல்படும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் பதிலடி கொடுத்து தொடரை பறிகொடுக்காமல் இருக்க ஆப்கானிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆடாததால் தடுமாறும் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர எழுச்சி பெற்றால் தான் இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஆப்கானிஸ்தான் ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை.
இந்தூர் மைதானத்தில் இந்திய அணி முன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து இருக்கிறது. கடைசியாக இங்கு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆட்டத்திலும் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவும் ஆட்டத்தில் முக்கிய தாக்கம் ஏற்படுத்தும். எனவே 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில், விராட்கோலி, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார் அல்லது அவேஷ் கான்.
ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் அல்லது ரஹமத் ஷா, இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, நஜ்புல்லா ஜட்ரன், கரிம் ஜனாத், குல்படின் நைப், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.